சென்னை: காலாவதியான, பயன்படுத்தப்படாத மருந்துகளை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) வெளியிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் மருத்துவர் ராஜீவ்சிங் ரகுவன்ஷி அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தரக் குறைபாட்டுக்காக திரும்பப் பெறப்பட்ட மருந்துகள், முறையாக பேக்கிங் செய்யப்படாத மருந்துகள், பயன்படுத்தப்படாத மருந்துகள், காலாவதியான மருந்துகள் என தேவைப்படாமல் இருக்கும் மாத்திரைகள், மருந்துகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது அவசியம் ஆகும். இல்லையென்றால், அந்த மருந்துகள் மீண்டும் விதிகளுக்கு புறம்பாக விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
கழிவாக குடிநீர் ஆதாரங்கள், நிலப்பகுதிகள், வனப் பகுதிகளில் கொட்டப்பட்டால் அவை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் அல்லது விழிப்புணர்வு இல்லாதவர்களிடம் அந்த மருந்துகள் கிடைக்கும்போது அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக பாதுகாப்பின்றி அகற்றப்படும் மருந்துகளால் புறச்சூழல் வெகுவாக பாதித்து உயிர் சங்கிலி தடைபடும். அதனால், அந்த மருந்துகளை உரிய பாதுகாப்பு விதிகளுடன் அகற்ற வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மாநில அரசுகள், மருந்து நிறுவனங்கள், விற்பனையாளர்கள், மருத்துவ துறையினர், மருத்துவமனைகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அந்த நெறிமுறைகளை பின்பற்றி மருந்துகளை அகற்றுதல் அவசியம் ஆகும். அவற்றை எவ்வாறு சேகரித்து அழிப்பது என்பன தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.