சென்னை: “காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை, மின்வாரியம் முழு அளவில் பயன்படுத்த வேண்டும்” என, புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் 9,331 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 60 சதவீதம் தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்துவதோடு, எஞ்சிய 40 சதவீத மின்சாரம், மின்வாரியத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நிறுவனங்கள் 2 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலைகளை அமைத்து, பிற மாநிலங்களுக்கு செல்லும் மின்தொடரமைப்புக் கழகத்தின் மின்வழித் தடத்தில் இணைத்துள்ளன.
இந்நிலையில், மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். இந்தக் காலத்தில் காற்றாலைகளில் இருந்து தினசரி சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தை ரூ.3.10-க்கு மின்வாரியம் வாங்குகிறது. கடந்த 2024 ஜுலை 30-ம் தேதியன்று 5,899 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதுவே, இதுவரை காற்றாலைகளில் இருந்து கிடைத்த அதிகபட்ச மின்சார அளவாகும். கடந்த மாதம் வரை காற்றாலைகளில் இருந்து 800 மெகாவாட் குறைவாக மின்சாரம் கிடைத்தது.
இம்மாதம் சீசன் தொடங்கி உள்ளதால் சில தினங்களாக ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. இந்நிலையில், காற்றாலையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என மின்வாரியத்துக்கு, புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் முதன்மை ஆலோசகர் வெங்கடாச்சலம் கூறியதாவது: இந்திய வானிலை மையம் அறிக்கையின் படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 25-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதனால், தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று தொடங்குவதால், காற்றாலைகளில் இனி அதிக மின்சாரம் கிடைக்கும். நடப்பு சீசனில் இயற்கையாக கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த இருவாரங்களுக்கு காற்றாலைகள் இணைக்கப்பட்டுள்ள துணைமின் நிலையங்கள், மின்வழித் தடம், மின்மாற்றிகள் ஆகியவற்றில் முழு வீச்சில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சீசனில் காற்றாலைகளில் இருந்து வழக்கத்தை விட அதிக மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த மின்சாரத்தை முழு அளவில் மின்வாரியம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.