சென்னை: மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக கார் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ஏழில் தீபாவுடன், கார் ஓட்டுநர் பாபு திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்ததாக, மற்றொரு ஓட்டுநர் கண்ணன், கிருஷ்ணமூர்த்தியிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆக்கிரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோர் கூலிப்படையினர் விஜயகுமார், ஜான், செந்தில் ஆகிய மூன்று பேர் உதவியுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு பாபுவின் ஆணுறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.
இது தொடர்பாக பாபுவின் தந்தை அளித்த புகாரில் சென்னை அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் ஆறு பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, வழக்கில் முக்கியமான சாட்சியாக இருந்த எழில் தீபா, விசாரணை நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். காவல்துறை தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. டிரைவருடன் முதல் குற்றவாளியின் (கிருஷ்ணமூர்த்தி) மகளுடன் தகாத உறவில் இருந்தார் என்று காவல்துறை கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதனை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனக் கூறி, ஆறு பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.