சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிராக மனு கொடுத்த துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வராததால், மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 22, அதிமுக 7, காங்கிரஸ் 3, இந்திய கம்யூ., மதிமுக தலா 1, சுயேச்சை-2 வென்றிருந்தன. திமுகவைச் சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், குணசேகரன் துணை மேயாகவும் உள்ளனர். மதிமுக கவுன்சிலர் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இடம் காலியாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் சரியாக நடப்பதில்லை. கவுன்சிலர்களை மேயர் மதிப்பதில்லை. விதிமீறி ஒப்பந்தப்புள்ளி நடத்துவதாக புகார் தெரிவித்து, துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட 8 திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக 7, காங்கிரஸ் 3, இந்திய கம்யூ., 1, சுயேச்சைகள் 2 என 21 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
தொடர்ந்து மேயர் முத்துத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 24 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட மனுவை ஆணையர் சங்கரனிடம் கொடுத்தனர். மேலும் அதிமுக கவுன்சிலர் ராம்குமார் தொடர்ந்த வழக்கில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஒரு மாத காலத்திற்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி இன்று காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்புக் கூட்டம் ஆணையர் சங்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 7 அதிமுக கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என, 8 பேர் மட்டும் பங்கேற்றனர். போதிய உறுப்பினர்கள் இல்லாததால் நம்பிக்கையில்லாததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மனு கொடுத்த திமுக துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் மற்றும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் கூறியதாவது, “நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வி அடைய வைக்க துணை மேயர் உள்ளிட்ட அனைவரையும் கடத்தி வைத்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த துணை மேயர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதே எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. போதிய உறுப்பினர்கள் வராததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என்று ஆணையரிடம் கேட்டுள்ளோம்.” என்றனர்.
ஆணையர் சங்கரன் கூறுகையில், நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தோல்வி அடைந்தது’ என்றார்