மதுரை: காய்கறி வாங்கவும், பெட்ரோல் போடவும் போக முடியவில்லை” என கொலையுண்ட காவலாளி அஜித்குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா வேதனையுடன் கூறினார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்ற வழக்கில், நகை திருட்டு புகார் கொடுத்த கல்லூரி பேராசிரியை திருமங்கலம் நிகிதா, அவரது தாயார் சிவகாமியிடம் சிபிஐ அதிகாரிகள் மதுரையில் 2-வது முறையாக விசாரித்தனர். 6 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது, அஜித்குமாரிடம் பேசியது குறித்தும், ஜூன் 27-ம் தேதி காலையில் கோயிலில் நடந்த சம்பவம், மாலையில் திருப்புவனம் காவல் நிலையத்துக்கு அஜித்குமாரை அழைத்து சென்றபோது, நிகிதாவும், தாயாரும் காவல் நிலையத்தில் நடந்தவை என பல்வேறு கோணத்திலும் விசாரித்தனர் .
இதன்பின் வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் நிகிதா கூறியது: “நான் வெறும் புகார் மட்டுமே கொடுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என தெரியாது. அஜித்குமார் இறந்தற்கு நான் வருத்தப்படுகிறேன். இதற்காக தினந்தோறும் அழுதுகொண்டே உள்ளேன். சிபிஐயிடம் எல்லாமே சொல்லிவிட்டேன். இதற்கு மேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை. வேதனையாக உள்ளது. வேண்டும் என்றோ, சாக வேண்டும் என்றோ நினைப்போமா.
நானும் வேதனையில்தான் உள்ளேன். சாப்பிட முடியவில்லை. காய்கறி வாங்க, பெட்ரோல் போட கூட போக முடியவில்லை. கல்லூரிக்கும் செல்ல முடியவில்லை. ஒருபுறம் மட்டுமே பேசுகிறார்கள். மறுபுறம் பற்றி பேசாதது வருத்தமாக உள்ளது. என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். நடந்த உண்மைகளை சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு வருவேன்” என்று கூறினார்.