சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வராக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மதிய உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் போற்றியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!
நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்குப் புகழ் வணக்கம்!” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
கல்வி வளர்ச்சி நாள்: காமராஜரின் பிறந்தநாள் ‘கல்வி வளர்ச்சி’ நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது என்று கேட்டவர்கள் இருந்த காலக்கட்டத்தில் கல்விப் புரட்சியை நிகழ்த்தியவர் காமராஜர். 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதல்வராக காமராஜர் நீடித்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் கல்வியில் தனிக் கவனம் செலுத்தினார்.