சென்னை: காமராஜர் குறித்து தான் பேசியதை விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என எல்லோரையும் அன்புடன் வேண்டிக் கொள்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாக விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர் வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போது கூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள்.
கல்விக்கண் திறந்த காமராஜர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.
நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, தியாகத் தழும்பேறி, முதல்வராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு: இதனிடையே, காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரை கொச்சைப்படுத்தும் விதத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பேசியுள்ளார்.
அவர் ஜூலை 17-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குள் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாளை காலை 10 மணியளவில் திருச்சியில் உள்ள திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினரும், காமராஜர் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அலர்ஜி காரணமாக காமராஜருக்கு ஏசி இல்லாமல் தூங்க முடியாது என்பதால், அவர் தங்கும் விடுதிகள் அனைத்திலும் ஏசி வசதி செய்யச் சொல்லி கருணாநிதி உத்தரவிட்டதாகவும், அதனை கருணாநிதியே தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் திருச்சி சிவா பேசியது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.