பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கற்கள் வீசி வன்முறையில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியார் தொழிற்சாலை ஓன்று செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத்(35) என்ற ஒப்பந்த தொழிலாளி, நேற்று முன் தினம் இரவு மதுபோதையில், ஊழியர்களுக்கான தற்காலிக குடியிருப்பு வளாகத்தின் முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்த அமரேஷ் பிரசாத் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நேற்று தற்காலிக குடியிருப்பு வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலாஜி உள்ளிட்ட 10 போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை போராட்டக்காரர்களை கலைத்ததோடு, கல் வீச்சு சம்பவம் தொடர்பாக சுமார் 50 வடமாநில தொழிலாளர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து, தொழிற்சாலையின் ஒப்பந்த நிறுவனம் உயிரிழந்த தொழிலாளிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவாதம் அளித்ததையடுத்து, தொழிலாளியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இன்று காலை விமானம் மூலம் உத்திரபிரதேசம் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக கைதான 50 பேர் உட்பட 110 வட மாநில தொழிலாளிகளை போலீஸார் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், காட்டூர் போலீஸார், கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்குத் தொடர்பாக, போலீஸார், 29 வட மாநில தொழிலாளர்களை கைது செய்து, அவர்களை இன்று அதிகாலை பொன்னேரி ஜே.எம். 1 நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சென்னை- புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
மற்ற தொழிலாளர்களிடம் போலீஸார், ’ இனி வன்முறையில் ஈடுபட மாட்டோம்’ என ஒப்புதல் வாக்குமூலம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை தற்காலிக குடியிருப்புக்கு அனுப்பி வைத்தனர்.