சென்னை: பணமதிப்பிழப்பு காலத்தில் காஞ்சிபுரத்தில் சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்கியிருந்ததாக சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் என்ற சர்க்கரை ஆலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.120 கோடி ரூபாயும், மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது. இந்த கடன்களுக்கு அடமானமாக வைக்கப்பட்டிருந்த ஆலை இயந்திரங்களை, கடன் கொடுத்த வங்கிகளுக்கு தெரியாமல் விற்று, தனியார் சர்க்கரை ஆலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக நிதி நிறுவனம் ஒன்று சிபிஐயில் புகார் அளித்தது.
உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை, திருச்சி, தென்காசிஉள்ளிட்ட 6 இடங்களில் சோதனைநடத்தியது. இந்நிலையில், சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா பணமதிப்பிழப்பு காலத்தில் ரூ.450 கோடி பழைய ரூ.500, ரூ.1000 ரொக்கம் கொடுத்து அந்த சர்க்கரை ஆலையை வாங்கியிருப்பதாகவும், அது பினாமி பெயரில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் நிதி மேலாண்மையில் இருந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல்,சர்க்கரை ஆலையை விற்பனை செய்வதற்காக ரூ.450 கோடிபெற்றதாகவும், அதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் சிபிஐ எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலும், அந்த சர்க்கரை ஆலையை சசிகலா பினாமி பெயரிலேயே வைத்திருந்தது தெரியவந்துள்ளதாக 2020-ம் ஆண்டு வருமான வரித்துறை எப்ஐஆரை மேற்கொள் காட்டி சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதனால், வருமானவரித் துறை அந்த ஆலையை பினாமி சொத்து என்று அறிவித்து, சசிகலாவை அதன் உண்மையான உரிமையாளராகக் குறிப்பிட்டதாகவும் இதனிடையே, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியும், பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்குகளை மோசடி என்று அறிவித்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தினேஷ் படேல், தம்பூராஜ் ராஜேந்திரன், பாண்டிய ராஜ், நிதி அதிகாரி வெங்கட பெருமாள் முரளி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.