புதுச்சேரி: காங்கிரஸ், திமுக புதுச்சேரி மக்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அந்த வைரஸை தடுக்கும் தடுப்பூசி என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீர்த்திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி கடந்த 22-ம் தேதி அமலுக்கு வந்தது.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் தீபாவளி பரிசு கொடுக்கிறோம் என்றார். ஆனால் அவர் தீபாவளி பரிசு கொடுக்கவில்லை. நவராத்திரி பரிசு கொடுத்துள்ளார். தீபாவளி, நவராத்திரி என்றாலே திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வெறுப்பு. திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரி என எந்த மாநிலமாக இருந்தாலும் தீபாவளிக்கு வாழ்த்து சொன்னது கிடையாது. மற்ற மதங்களுக்கு வாழ்த்து சொல்வார்கள்.
பிரதமரின் ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை பொருத்தவரை மக்களை மையமாகக்கொண்டது. இது கூட்டாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம் பெரிதாக வலுப்படுத்துவதற்கு எடுத்துக்காட்டு. ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில நிதியமைச்சர்கள் எல்லோரும் ஒரு மனதாக சீர்த்திருத்தத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க ஜிஎஸ்டி, சுய சார்பு இந்தியா இவை இரண்டும் தான் அடித்தளம் என்று பிரதமர் கூறியுள்ளார். எப்போதும் இந்தியாவின் பொருளாதாரம் இவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பல தவறான பொருளாதார கொள்கை, ஊழல், லஞ்சம் போன்றவைகளால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டு வீழ்ந்தது.
ஆனால் இப்போது உலகில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியவில்லை. காரணம் மாநில அரசுகள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் தற்போது ஜிஎஸ்டி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் இந்தியாவை 3-வது இடத்துக்கு கொண்டு செல்லும்.
இந்த ஜிஎஸ்டி குறைப்பு எல்லா மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. புதுச்சேரி மக்களை பொருத்தவரையில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். காங்கிரஸ்-திமுக என்பது புதுச்சேரி மக்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ். அதனால் மிகவும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அந்த வைரஸை தடுக்கும் தடுப்பூசி. இந்த தடுப்பூசிக்கு மக்களின் பேராதரவு எப்போதும் இருக்கும். ஜிஎஸ்டி மக்கள் வாழ்க்கையில் பெரிய சந்தோஷத்தை கொண்டு வரும் என்றார்.
ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களுடன் பாஜக தொடர்பில் இல்லை: மாநில தலைவர் ராமலிங்கம் கூறுகையில், பாஜக இரண்டாம் தர அரசியல் செய்ய விரும்பாது. கூட்டணி கட்சியோடு தான் எப்போதும் பயணிப்போம். கூட்டணி தர்மத்தை மீறுவது இல்லை. 3 சுயேட்சை எம்எல்ஏ-கள் தாமாகவே வந்து பாஜகவுக்கு ஆதரவு அளித்தார்கள்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அவர்களின் நிலைப்பாடு தெரிந்துவிட்டது. ஆகையால் பாஜகவுக்கு அவர்களின் ஆதரவு இல்லை. நாங்களும் அவர்களை அழைப்பதில்லை. அவர்களோடு எந்தவித தொடர்பிலும் இல்லை. ஜே.சி.எம் மக்கள் மன்றம் நிச்சயம் பாஜகவின் பி டீம் இல்லை. அதனை நாங்கள் அங்கீகரிக்கவும் மாட்டோம்.
எங்களின் தேசிய தலைமை என்.ஆர்.காங்கிரஸ் – அதிமுகவுடன் தான் கூட்டணி என்று கூறியுள்ளது. ஜே.சி.எம். மக்கள் மன்றத்தோடு யாரேனும் தொடர்பில் இருந்தால் விலக்கி வைக்கப்படுவார்கள் என்பதும் தான் தேசிய தலைமையின் கொள்கை.
நிச்சயமாக ஜே.சி.எம்-ஐ நாங்கள் ஒருகாலும் ஆதரிக்கமாட்டோம். அமைச்சர் ஜான்குமார் ஜே.சி.எம் மக்கள் மன்றத்துடன் தொடர்பில் இருப்பது குறித்து தலைமைக்கு கொண்டு சென்றுள்ளோம். அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுப்பார்கள். பிரதமரின் பிறந்த நாள் நலத்திட்ட விழா என்பதால் துணைநிலை ஆளுநர் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதனை தேசிய தலைமை கவனத்தில் கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.