சென்னை: தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து, வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதுசம்பந்தமாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இந்த விளம்பரங்களுக்கான செலவுத்தொகை 33 லட்சம் ரூபாயை செலவுக்கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2021-ம் ஆண்டு அசன் மவுலானாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கமளித்த நிலையில், தேர்தல் செலவு கணக்கை முறையாக சமர்ப்பிக்காததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு, 2023-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கும் பதிலளித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், 2025 ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகக் கூறி, அசன் மவுலானாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என 2023-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும், அந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரியும், அசன் மவுலானா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டு முறைகேட்டை அம்பலப்படுத்தியதால், உள்நோக்கத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு பின் விசாரணைக்கு ஆஜராகக் கூறி, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, எம்எல்ஏ அசன் மவுலானா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ராகுல்காந்தி மொத்தமுள்ள 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அதுசம்பந்தமான விளம்பரங்களுக்கு காங்கிரஸ் கட்சி தான் செலவு செய்துள்ளது. கட்சி சார்பில் செய்யப்பட்ட செலவுகளை வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இன்னும் 10 மாதங்களில் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.