கஸ்தூரி ரங்க ஐயங்கார் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட்(தி இந்து- இந்து தமிழ் திசை நாளிதழ்கள்) சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கும்பகோணம் அரசு மருத்துவமனை, ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி கோயில் மற்றும் இன்னம்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கஸ்தூரி ரங்க ஐயங்கார் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் மருத்துவர் நளினி கிருஷ்ணன் தலைமை வகித்தார். டிரஸ்டிகள் விஜயா அருண், கிருபா ஆகியோர் இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினர். தொடர்ந்து, ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி கோயில் பெருமாளுக்கு துளசி மற்றும் பிரசாதங்களை எடுத்துச் செல்வதற்கு 2 பேட்டரி வாகனங்கள்(இ-கார்ட்), கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உணவு, சலவைத் துணிகள், குப்பை ஆகியவை கொண்டு செல்வதற்கு 3 பேட்டரி வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளில், கும்பகோணம் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகரன், கண்காணிப்பாளர் கமரூல் ஜமான், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ஹம்சன், வேங்கடாசலபதி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.