பெரம்பலூர்: கவின் படுகொலையை தவெக தலைவர் விஜய் கண்டிக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. குறிப்பிட்டார்.
திருநெல்வேலி கவின் படுகொலையைக் கண்டித்தும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, திருமாவளவன் எம்.பி. பேசியது: “பட்டியலின மக்களுக்கு எதிரான இதுபோன்ற சாதிய படுகொலைகள் நிகழும்போது பெரிய அரசியல் கட்சிகளும், புதிய கட்சிகளும் மவுனமாக இருக்கின்றன. குறிப்பாக, கவின் படுகொலையை நடிகர் விஜய் கண்டிக்கவில்லை.
திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சென்றபோது, கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அதிமுக சார்பில் எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை. ஆனால், சமூக அநீதிகளை தொடர்ந்து கண்டித்து வரும் விசிக மீது பிற கட்சிகள் வீண்பழி சுமத்துகின்றன.
எம்ஜிஆரை அவமதித்து பேசிவிட்டேன் என கடந்த 2 நாட்களாக அதிமுகவினர் கொந்தளிக்கின்றனர். என்னைவிட எம்ஜிஆரை பாராட்டி பேசியவர்கள் யாரும் இருக்க முடியாது. ஜெயலலிதாவையும், அவரது துணிச்சலையும் பாராட்டி இருக்கிறேன். அதிமுக என்ற கட்சி அழிந்துவிடக்கூடாது. அது வலுவுடன் இருப்பதுதான் நல்லது.
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இருந்ததால்தான் தமிழகத்தில் பாஜக போன்ற தேசிய கட்சிகளால் காலூன்ற முடியவில்லை. எனவே, பாஜகவின் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளாமல், அதிமுக தனித்து செயல்பட்டு, தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் சாதி குறித்து நான் பேசிய கருத்துகளில் எந்த தவறும் இல்லை. அவர் சட்டப்பேரவையில் நடந்துகொண்டதை வைத்து அந்த கருத்தை கூறினேன். மற்றபடி, அதிமுகவை குறைத்து மதிப்பிட்டு கூறவில்லை.
தமிழகத்தில் சாதியக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இது அனைத்து சமூகத்திலும் நிகழ்கிறது. இது தமிழக பிரச்சினை மட்டுமல்ல, தேசிய அளவில் இருக்கும் பிரச்சினை. எனவே, இதுபோன்ற சாதியக் கொலைகளை தடுக்க மாநில அரசு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் சாதியக் கொலைகளை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு சட்டம் கொண்டுவந்தால், மீண்டும் அவரே முதல்வர் ஆவார். அவர் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து” என்று திருமாவளவன் பேசினார்.