திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுர்ஜித்தின் பெற்றோரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை சப்-இன்ஸ்பெக்டர்களுமான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சரவணனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர் திருநெல்வேலியிலும், ஆறுமுகமங்கலத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், காவல் துறை உயர் அதிகாரி சாமுண்டீஸ்வரி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, காவல் துணை ஆணையர்கள் வினோத் சாந்தாராம், பிரசன்னகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் பூங்கொடி (திருநெல்வேி), பென்னட் ஆசீர் (தூத்துக்குடி) உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழுவினர் ஆறுமுகமங்கலத்திலுள்ள கவின் செல்வகணேஷின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.