மதுரை: கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ். இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர். இவர் கடந்த 27ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ண குமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் காவலர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கவின் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதி நாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், கவின் கொலை வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பில் நடைபெறவும், கவின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், காதல் விவகாரத்தில் கொலைகள் நடைபெறுவதை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் வாதிடுகையில், கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கவின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை சரியான திசையில் செல்கிறது. இதில் தலையிட தேவையில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐ.பினேகாஸ், என்.அர்ஜூன்குமார் வாதிடுகையில், தமிழகத்தில் 2017 முதல் 2024 வரை 65 காதல் விவகாரக் கொலைகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பாரபட்சம் இல்லாமலும், ஒருதலை பட்சமாக இல்லாமலும் நடைபெற வேண்டும்.
கவின் கொலையில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிப் பாண்டியன் தலையீடு இருப்பதாக கவின் தந்தை புகார் அளித்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புகார் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் கொலையில் தொடர்புடையவர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கில் 3-வது எதிரி இன்னும் கைது செய்யப்படவில்லை. இதையும் போலீஸார் கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை அறிக்கையில் குறைபாடு இருந்தால் மனுதாரர் சார்பில் இறுதி விசாரணையின் போது நீதிமன்றத்தில் முறையிடலாம். காதல் விவகாரக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக இறுதி விசாரணையின் போது முடிவெடுக்கப்படும்” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.