நெல்லை: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது பெற்றோரான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சப்-இன்ஸ்பெக்டர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சரவணனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறையில் இருக்கும் சுர்ஜித் மற்றும் சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சார்பில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திருநெல்வேலி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதையொட்டி பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து துப்பாக்கி போலீஸார் பாதுகாப்புடன் சுர்ஜித்தும், சரவணனும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரு தரப்பு வாதங்களுக்குப்பின் சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக்குப்பின் நாளை மறுநாள் மாலை 6 மணிக்குள் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஹேமா உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.