திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கொலை தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் நீதிபதி ச.தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையத்தின் துணை தலைவர் இமயம், உறுப்பினர்கள் செ.செல்வக்குமார், முனைவர் சு.ஆனந்தராஜா, பொ.இளஞ்செழியன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார், காவல் துணை ஆணையர்கள் வினோத் சாந்தாராம், விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன், காவல் உதவி ஆணையர் சுரேஷ், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆணைய தலைவர் நீதிபதி ச.தமிழ்வாணன் கூறியது: “திருநெல்வேலியில் நடைபெற்ற கவின் செல்வகணேஷ் கொலை சம்பவம் மிகவும் துயரமான சம்பவம். அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆண் திருமணம் செய்வதற்கான உரிமை உள்ளவர்கள்.
சாதிய கொலைகள் மனித சமுதாயத்திற்கு எதிரானது. இந்த கொலை சம்பவத்தை காவல் துறையும் வருவாய் துறையும் முறைப்படி அணுகி முறையான விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சட்டத்தின்படி இந்த விவகாரத்தில் செய்ய வேண்டியது அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை சாதிய பிரச்சனைகளாக மட்டும் பார்க்காமல் சமூகத்துக்கான பிரச்சனையாகவே பார்க்க வேண்டும். சமூக நீதி காக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
நிரபராதிகள், அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆணையம் எதிர்பார்த்ததை காவல் துறையும் வருவாய் துறையும் செய்து வருகிறார்கள். அவர்களது நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. இதுபோன்ற தவறான செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த சம்பவத்தால் யாருக்கும் லாபம் இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஒரு சிலர் ஏற்க மறுத்து கொலைகளை ஆதரிக்கின்றனர். சாதிய படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் அவசியம். மத்திய மாநில அரசுகளை இந்த விவகாரம் தொடர்பான சட்டம் கொண்டு வருவதற்கு ஆணையம் அழுத்தம் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.