தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங் கலத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் (27). இவர், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதி மாறி காதலித்ததால் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரி கின்றனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி, கவின் செல்வ கணேஷின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக தலைவர்: இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காலை கவின் செல்வ கணேஷின் வீட்டுக்கு வந்து, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் இதுபோன்ற ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
கனிமொழி எம்.பி: இதுபோல் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என அவர்களிடம் தெரிவித்தார்.
சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என கவின் செல்வகணேஷ் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உடனிருந்தனர்.
திருமவளவன் ஆறுதல்: தொடர்ந்து பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கவின் செல்வகணேஷ் வீட்டுக்கு வந்து, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். நடந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் கேட்டறிந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, பக்கபலமாக இருக்கும் என உறுதியளித்தார்.