தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று எதிர்வரும் 18-ம் தேதியோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கடந்தாண்டு ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த விஷச் சாராயம் அருந்திய 229 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 69 பேர் உயிரிழந்தனர். 160 பேர் சிகிச்சைப் பெற்றதில் சிலர் கண்பார்வை இழந்துள்ளனர். விஷச் சாராயம் விற்பனை செய்தது, கடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யப்பட்டு, ஒருவரை தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணமாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
கள்ள சந்தையில் மது… – இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிலை குறித்து அறிய கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் வசித்து வருவர்களை சந்தித்தபோது, நம்மை எதிர்நோக்கிய சத்யா என்ற பெண், “கடந்தாண்டு ஒரு களேபரமாக காட்சியளித்த பகுதியில் தற்போது கள்ளச் சாரய விற்பனை இல்லை. இது நிம்மதியாக இருக்கிறது. ஆனால் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. ‘கைப்பழக்கம் சுடுகாடு வரை’ என்பது போலவே வேறு வழியில் மது பழக்கமும், புழக்கமும் இருக்கிறது” என்று கவலையுடன் தெரிவித்தார்.
அவரது அருகில் கைக் குழந்தையோடு அமர்ந்திருந்த ராதா என்பவர், “நான் இருமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, என் கணவர் மணிகண்டன், இந்த விஷச் சாராயத்தை குடித்து இறந்தார். அப்பா முகத்தையே பாராத 6 மாத பெண் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்க்கிறேன்” என்றார். அரசு அளித்த நிவாரணம் குறித்து கேட்ட போது, மணிகண்டனுக்கு இரு மனைவிகளில், 2-வது மனைவியான ராதாவுக்கு 3 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. அதை வைத்துக் கொண்டு, இருக்க இடமின்றி, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பதாகவும், தனக்கு இருக்க ஒரு இடம் அரசு சார்பில் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
விஷச் சாராயத்தை அருந்தி கண்பார்வை பறிபோன நிலையில் வாழும் மாயக்கண்ணனை சந்தித்தபோது, “மூட்டைத் தூக்கும் தொழில் எனக்கு குறைந்த பணம்தான் கிடைக்கும். ‘குறைந்த விலைக்கு கிடைக்கிறதே!’ என்று வாங்கிக் குடித்தேன். இப்போது பார்வையை பறிகொடுத்து, ஒரு வருடம் ஆகப்போகிறது. எனது மகனும் மகளும் தான் பார்வையாக உள்ளனர். அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் கொடுத்தனர். மகன் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருக்கிறார். மகள் பிளஸ் 2 படிக்கிறார். மனைவி சம்பாத்தியத்தில் காலம் கழிகிறது” என்று வருத்தத்துடன் கூறுகிறார்.
இவரைப் போன்றே ராஜஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து, பெயிண்டர் வேலை செய்து வந்த அணில்பால் என்பவரும், பார்வை பறிபோன நிலையில், மனைவியின் தையல் தொழில் தயவில் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். “நாங்களெல்லாம் இந்த கள்ளச் சாராயாத்துக்கு எதிரான நபராக இப்போது மாறியிருக்கிறோம். ஆனால் எங்கள் குடும்பத்தை நிற்கதியாய் ஆக்கிவிட்டோம்” என்று வேதனையோடு கூறுகிறார் அணில்பால்.
இதே கருணாபுரத்தில் விஷச் சாராயத்தால் பெற்றோரை இழந்த ஒரு மாணவி கூறுகையில், “தாய் தந்தை உயிரிழந்த நிலையில், நானும் எனது இரு தம்பிகளும் நிற்கதியாய் ஆனோம். தவிப்பில் இருந்த எங்களுக்கு, அரசு அளித்த நிவாரணத் தொகையை வைப்புத் தொகையாக வைத்துள்ளோம். எனக்கு, எனது இரு தம்பிகளுக்கு முறையே மாதம் ரூ. 5 ஆயிரம் பராமரிப்பு செலவுக்காக அரசு வழங்குகிறது. மேலும் ஒரு கல்வியாண்டுக்கு ரூ. 40 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக அரசு வழங்குகிறது.
பெற்றோரை இழந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசும், சமுதாயமும் ஆதரவளிப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. எங்களது பாட்டியே எங்களுக்கு பாதுகாப்பாளராக இருக்கிறார்” என்று தெரிவித்தார். விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அரசு அறிவித்த நிவாரணம் தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக கூறும் இவர்கள், மது போதையில் இருந்து பாடம் கற்றிருப்பதை கண்கூட காண முடிகிறது.
அரசின் செயல்பாடுகள்… – இந்த விஷச் சாராய சம்பவத்திற்குப் பின், கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மது போதை ஒழிப்பு மையம் செயல்படத் தொடங்கி, ஒரு மருத்துவரும் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த மருத்துவக் கல்லூரி முதல்வர், எவ்வளவு பேருக்கு போதை ஒழிப்பு மையம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரத்தை தெரிவிக்க மறுத்து விட்டார்.
மாவட்ட மது விலக்கு உதவி ஆணையர் செந்தில்குமார் கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதையை ஒழிக்க, கிராம அளவிலான கிராம நிர்வாக அலுவலர், கிராம செவிலியர், ஊராட்சி செயலர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைத்து, போதை விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்டவைகளை கண்காணித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கல்வராயன்மலையில் சிறப்புக் குழு அமைத்து கள்ளச்சாராயம் உற்பத்தி தடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும் திங்கள் கிழமை அனைத்து அலுவலர்களையும் அழைத்து உரிய அறிவுரைகளை வழங்கி, விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் போதை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவிக்கிறார்.