சென்னை: ‘கல்வி நிதி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம்’ என்று மத்திய அரசுக்கு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் ‘கல்லூரி களப்பயணம்’ என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்லூரிகளைப் பார்வையிடுகின்றனர்.
அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான ‘கல்லூரி களப்பயணம்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் கிராந்தி குமார், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி.ஹரிகரன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நோக்கில் ‘கல்லூரி களப்பயணம்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் வெவ்வேறு கல்லூரிகளுக்கு அழைத்துச்செல்லப்படும் மாணவர்கள் அங்குள்ள படிப்புகள், வசதிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை அறிந்துகொள்வதால் அவர்களுக்கு உயர்கல்வியில் சேர வேண்டும் என்ற சிந்தனை மனதில் உருவாகும். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். அவர்கள் 822 கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி களப்பயணத்தை ஆய்வு செய்தபோது இதில் பங்கேற்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்வதைக் கண்டறிந்தோம். இது 100 சதவீதத்தை எட்ட வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு. அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 4 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ஒரு அரசு பள்ளியில் வெறும் 4 குழந்தைகள் படித்தால்கூட அந்தப் பள்ளி தொடர்ந்து இயங்கும். அரசு லாபநோக்கு பார்ப்பது கிடையாது. கல்வி என்பது ஒரு சேவை என்று கருதுகிறோம். ஆனால், தனியார் பள்ளிகள் அப்படி அல்ல. அவர்கள் லாபநோக்கு பார்த்துதான் பள்ளிகளை நடத்துவார்கள்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இத்திட்டத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். கல்வி நிதி வழங்குவதில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இத்திட்டத்தில் ரூ.600 கோடி நிதி வரவேண்டியுள்ளது. டெல்லியில் மத்திய கல்வி அமைச்சரை இரண்டு மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளோம்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். நிதி ஒதுக்கீடு என்பது நமது உரிமை. தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மத்திய அரசு இப்போதாவது மனமிரங்கி தமிழகத்துக்கான கல்வியை நிதியை விடுவிக்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.