சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் விண்ணப்பிக்க வழியில்லாமல் அதற்கான இணையதள பக்கத்தை முடக்கி வைத்திருப்பது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இணையதள பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக கூறி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க நிர்வாகி வே.ஈஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கல்வி உரிமை சட்டத்தின்படி மத்திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசும் நிதி கிடைப்பதை காரணம் காட்டாமல் நிதியை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி மனுதாரர் தரப்பில் பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன், தனியார் பள்ளிகளின் இயக்குநர் குப்புசாமி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தனியார் பள்ளிகள் இயக்குநர் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், மத்திய அரசு தனது பங்களிப்பு நிதியான 60 சதவீதத்தை ஒதுக்காததால் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்துக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த இயலவில்லை என தெரிவித்திருந்தார். அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் பங்குள்ளது என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ஏழை, எளிய மாணவர்கள் விண்ணப்பிக்க வழியின்றி இணையதள பக்கத்தை முடக்கி வைத்திருப்பது ஏன் என்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரட்டு கவுரவம் பார்க்காமல் தமிழக அரசு இணையதள பக்கத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினர். அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாணவர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. தமிழக அரசுக்கு எந்த கவுரவப் பிரச்சினையும் இல்லை, என்றார். அதையடுத்து விசாரணையை வரும் செப்.9-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.