சென்னை: பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்தி, கல்வித் துறையை திமுக அரசு சீரழிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், “கடந்த 2023-ம் ஆண்டில் 3,192 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2024 பிப்ரவரியில் தேர்வு நடத்தி, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் முடிந்தது. இது கடந்து ஓர் ஆண்டு ஆன பிறகும், பணி நியமன ஆணை வழங்க முடியாத அளவுக்கு திமுக அரசின் நிர்வாகம் செயலற்று இருக்கிறது.
ஆசிரியர்கள் இல்லாமல் பல அரசுப் பள்ளிகள் அல்லல்படுகின்றன. அதேபோல, கலை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வித் துறை முற்றிலும் முடங்கி உள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாதது, உதவி பேராசிரியர்களுக்கான தேர்வுகளை நடத்தாமல் காலம் தாழ்த்துவது, கவுரவ விரிவுரையாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காதது என திமுக அரசு தனது திறனற்ற செயல்பாட்டால் கல்வித் துறையை மேலும் சீரழித்து வருகிறது.
தமிழக கல்வித் துறை மீதும், தமிழக மக்களின் எதிர்காலம் குறித்தும் சிறிதேனும் அக்கறை இருந்தால், இனியும் காலம் தாழ்த்தாமல், தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். கல்லூரிகளில் போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.