தஞ்சாவூர்: நாட்டில் கலாச்சாரம் நம்மை இணைத்தாலும், அதை அரசியல் பிரிக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சலங்கைநாதம் கலை விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மைய இயக்குநர் கே.கே.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
விழாவில், பத்மஸ்ரீ விருதாளர்கள் சுவாமிமலை சிற்பக் கலைஞர் ராதாகிருஷ்ண ஸ்தபதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தெருக்கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்மந்தம் ஆகியோருக்கு தென்னக பண்பாட்டு மையம் சார்பில். ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் கலாச்சார தலைமையகமாக தஞ்சாவூர் இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேமும் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த 5 மாநிலங்களிலும் 16 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றாக இருந்தது. மிகப்பரந்த பரப்பளவைக் கொண்ட இந்த மாவட்டத்திலிருந்து காலப்போக்கில் நிர்வாகக் காரணங்களுக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டத்திலிருந்து கலை, இலக்கியம், இசை உள்ளிட்டவற்றில் மிகச்சிறந்த கலைஞர்கள் உருவாகினர். இதனால்தான் இங்கு மண்டல பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால கலாச்சாரப் பெருமை கொண்டது பாரதம். இங்கு ஏராளமான மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும், மிக உயரிய கலாச்சாரத்தால் பாரதமாக இணைக்கப்பட்டுள்ளது. பாரதம் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.
மக்கள் நாடு முழுவதும் பயணம் செய்கின்றனர். காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், அசாம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ராமசுவரத்துக்கு வருகின்றனர். இதேபோல, தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காசிக்கு செல்கின்றனர். இந்த கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட இணைப்பே பாரதம் என்று அழைக்கப்படுகிறது.
சுதந்திரப் போராட்டத்தின்போது நாடு முழுவதும் மக்கள் இணைந்து விடுதலைக்காகப் போராடினர். இந்த இணைப்பு கலாச்சாரத்தால்தான் உருவானது. சுதந்திரத்துக்குப் பிறகு நாம் பாரதிய அரசியலை உருவாக்காமல், மேற்கத்திய அரசியலைப் பின்பற்றத் தொடங்கியது துரதிருஷ்டவசமானது. அதிகாரத்தை அடைவதற்காக மேற்கத்திய அரசியல் பின்பற்றப்படுகிறது. இதனால், சாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைமையகமான சென்னை வளமாக இருக்கிறது. ஆனால், கலாச்சாரத் தலைமையகமான தஞ்சாவூர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூறுகின்றன. ஆனால், தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்க என்ன செய்தன? கலையைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், கலாச்சாரமே அரசியலாக்கப்பட்டது.
நாட்டில் கலாச்சாரம் நம்மை இணைத்திருந்தாலும், அதை அரசியல் பிரிக்கிறது. கலாச்சாரத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது. சில கலை நிகழ்ச்சிகளை நடத்தி, கலைஞர்களை அழைத்து பயணப்படி உள்ளிட்டவற்றை மட்டுமே அரசு வழங்கும். சமுதாயத்தினர்தான் புரவலர்களாக இருந்து கலைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலம் கலை, பண்பாடு செழித்தோங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மையத்தின் நிர்வாக அலுவலர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
கருப்புகொடி ஆர்ப்பாட்டம்: முன்னதாக, தமிழக உரிமைகளுக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு எதிராகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகக் கூறி, அவரது தஞ்சாவூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையிலான 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.