மதுரை: கலாச்சாரத்தைப் பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: குன்று இருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பார். ‘முருகா முருகா’ என்று சொன்னால் உருகாதார் யாரும் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகன் என்று ஏன் சொல்கிறோம். முருகா என்பதில் வல்லினம், மெல்லினம், இடையினம் இருக்கிறது. சொக்கநாதர் பூமியான மதுரையில் கூடியிருக்கிறோம். தூங்கா நகரமான மதுரையில் நீதி கிடைத்திருக்கிறது. தமிழக அரசிடமிருந்து நீதி கிடைத்ததோ இல்லையோ நீதிமன்றம் மூலம் நமக்கு நீதி கிடைத்துள்ளது. இந்த மாநாட்டைப் பார்த்து பலர் மலைத்துப் போயிருக்கின்றனர். பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். அந்த தடைகளை கடந்து மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் நம்மிடையே ஒரே கலாச்சாரம், பண்பாடு இருக்கிறது. அத்தகைய கலாச்சாரத்தைப் பாதுகாக்கத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த அளவுக்குப் பக்தர்கள் மாநாட்டுக்கு வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இங்கு இருக்கைகளில் அமர்ந்திருக்கும் கூட்டத்துக்கு இணையான கூட்டம், வெளியே இருக்கிறது. இந்த இடமே சொர்க்கபுரிபோல உள்ளது. இந்த இடத்தில் ஆன்மிகம் கலந்த சக்தி இருப்பதை உணர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.