சென்னை: சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகளில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெறுகின்றன. இப்பாதையில் கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘ஃபிளமிங்கோ’, 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘ஈகிள்’ ஆகியவை அடுத்தடுத்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கின.
இந்த இயந்திரங்களில் ஃபிளமிங்கோ இயந்திரம் தற்போது கச்சேரி சாலையை கடந்து, திருமயிலையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலும், மற்றொரு இயந்திரமான ஈகிள் திருமயிலையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பாலும் உள்ளன. இந்நிலையில் இந்த 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இது வழக்கமான நிகழ்வுதான். பொதுவாக ஒரு கி.மீட்டருக்கு 6 முறை கட்டர் ஹெட் பகுதியை கழற்றி, புதிய கட்டர் ஹெட் இணைக்கப்படும்.
பாறை உள்ள பகுதியில் அதிக தேய்மானம் இருப்பதால் அடிக்கடி புதிய கட்டர் ஹெட் மாற்ற வேண்டும்.இதுபோலவே தற்போதும் கட்டர் ஹைட் மாற்றும் பணி நடைபெறுகிறது. ஒரு வாரத்தில் கட்டர் ஹெட் மாற்றும் பணி முடிந்து, மீண்டும் இயந்திரங்கள் செயல்படத் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.