சென்னை: ‘கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் தனது கூட்டங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே?’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தவெக தலைவரான விஜய், செப்.20 முதல் டிச.20 வரைதமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தவெக, வின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக போலீஸார் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர். பாரபட்சமான மனநிலையில், நாங்கள் அளிக்கும் விண்ணப்பங்களை போலீஸார் உடனுக்குடன் பரிசீலிப்ப தில்லை. எதற்கெடுத்தாலும் கடைசி வரை போராடியே அனுமதி பெற வேண்டியுள்ளது.
எனவே எங்களது கட்சி்த் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் முழுவதும் அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை எந்தவொரு பாரபட்சமும் பார்க்காமல் உடனுக்குடன் அனுமதி வழங்க டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என கோரி யிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ் குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி மற்றும் வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் ஆஜராகி, ‘‘தவெக நடத்தும் கூட்டங்களுக்கு கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் வரக்கூடாது என போலீஸார் நிபந்தனை விதித்துள்ளனர்.
இதை நாங்கள் எப்படி கூற முடியும்? குறிப்பிட்ட அளவிலான வாகனங்களில் எந்த வழியாக செல்ல வேண்டும், எந்த வழியாக திரும்ப வேண்டும் எனவும் கூறுகின்றனர். வாகன நிறுத்தங்களையும் நாங்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர். ஆனால் மற்ற கட்சியினருக்கு இதுபோல எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை’’ என்றனர்.
பொது சொத்துகளுக்கு சேதம்: அப்போது நீதிபதி, ‘‘யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது. இதுபோன்ற கூட்டங்களில் பொதுமக்கள் போக்குவரத்து நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பொது சொத்துகளும் சேதப்படுத்தப்படு கின்றன. சாலைகள் முழுமையாக முடக்கப்படுவதால் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது போலீஸாரின் கடமை’’ என்றனர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், திருச்சியில் நடைபெற்ற தவெக பரப்புரையின்போது தொண்டர்கள் சிலர் உயரமான இடங்களில் ஆபத்தான முறையில் நின்று கொண்டிருந்தது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது போன்ற, நிபந்தனைகளை மீறியதற்கான புகைப்படங்களை நீதிபதியிடம் காண்பித்தார்.
அதற்கு நீதிபதி, ‘‘இது போன்ற இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? நீங்கள்தான் கூட்டத்தையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்த வேண்டும். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும். இல்லை யென்றால் அதில் நீதிமன்றம் தலையிட நேரிடும்’’ என எச்சரித்தனர். பின்னர், ‘‘இதுபோன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சியினருக்கும் தானே விதிக்கப்படுகிறது’’ என்றார்.
அதற்கு தவெக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘‘கரூரில் நடந்த முதல்வரின் ரோடு-ஷோ நிகழ்ச்சிக்கு என்ன நிபந்தனை விதிக்கப்பட்டது. எந்த நிபந்தனைகளை அவர்கள் கடைபிடித்துள்ளனர்? 200 வாகனங்கள் முதல்வரின் வாகனத்தைப் பின் தொடர்ந்து சென்றன’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி, “இது போன்ற பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் வருவதைத் தவிர்க்க வேண்டு மென மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தவெக தலைவர் விஜய் தெரிவிக்கலாமே? மேலும், தனது தொண்டர்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தவும் வேண்டும்’’ என கருத்து தெரிவித்தார். மேலும் ‘‘தவெக-வின் பொதுக் கூட்டம் மற்றும் பேரணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்குவதில் போலீஸாருக்கு என்ன சிரமம் உள்ளது?’’ என அரசு தரப்புக்கும் கேள்வி எழுப்பினார்.
விதிமுறைகள் வகுக்கவேண்டும்: பின்னர் நீதிபதி, ‘‘ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொண்டர்கள் வரவேண்டும் என்றும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் நிபந்தனை களை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
அதேபோல அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையிலான விதிமுறைகளை வகுக்க வேண்டும். அரசியல் கட்சியினருக் கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது.
பொது சொத்துகள் அல்லது பொதுமக்களின் தனிப்பட்ட உடமைகள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்’’ எனக்கூறி, இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.24-க்கு தள்ளிவைத்துள்ளார்.