தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. மதுரையில் இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். கீழே சின்ன குப்பை பாக்கெட் கூட விழுந்தது கிடையாது. இந்து முன்னணி தொண்டர்கள் நாற்காலிகளை எல்லாம் ஒழுங்குபடுத்தினர். இந்த மாதிரி கட்டுப்பாடுகளை வைத்து கட்சியை வளர்த்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. தவறு தான்.
ஆனால் நிர்வாகம் என்ன செய்தது ? காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ?. ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தகுந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் இருந்ததாக தெரியவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது எப்படி நடந்தது, காரணம் என்ன என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மாநில அரசாங்கமும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏதாவது சதியா, இயல்பாக நடந்த விபத்தா என்பது குறித்து மாநில அரசும் அதனுடைய அறிக்கையில் குறிப்பிட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியும் இது குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கெனவே கரூர் எஸ்பி சரியாக முறைப்படி செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கரூர் காவல்துறை கரைவேட்டி கட்டாத திமுகவாக செயல்படுகிறது என்றார். பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.