கரூர்: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்ததையடுத்து நாளை காலை முதல்வர் ஸ்டாலின் கரூர் வருகை தர இருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்ட செந்தில் பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் நடந்த உடனே முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் எனக்கும் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரையும், சுகாதாரத் துறை அமைச்சரையும் உடனடியாக கரூர் விரையுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை காலை முதல்வர் ஸ்டாலின் கரூர் வருகை தர இருக்கிறார். கரூர் மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய அனைத்து மருத்துவர்களும் உடனடியாக பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக சேலம், நாமக்கல் மருத்துவர்களும் வந்து கொண்டிருக்கின்றனர்” இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.