கரூர்: கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களையும், போலி வாக்காளர்களின் பெயர்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், போலி வாக்காளர்களையும், இறந்த வாக்காளர்களின் பெயர்களையும் பட்டியலில் இருந்து நீக்காவிட்டால் அது தேர்தல் முடிவுகளில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கள்ள ஓட்டு போடுவதற்கு வழிவகை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டியது வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளின் கடமை என்றும், பெரும்பாலான வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளாக திமுகவினரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும், இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களும் மட்டுமல்லாமல், ஒரு வாக்காளரின் பெயர் மூன்று முறை இடம்பெற்றுள்ளது என 2,400 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது.
முன்னாள் அமைச்சரின் புகார் குறித்து கள ஆய்வு நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மனுதாரருக்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனவா, இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.