திருநெல்வேலி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கை சிபிஐ-க்கு மாற்றாவிட்டால் அதிமுக சார்பில் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி செயலருமான இன்பதுரை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த இன்பதுரை பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு திட்டம் தொடங்கப்பட்ட பின்னரும் அதில் தண்ணீர் முறையாக வரவில்லை. பல இடங்களில் ஷட்டர்கள் பழுது ஏற்பட்டுள்ளது. பாலங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம் தொகுதியில் குவாரிகளின் ஆட்சி நடந்து வருகிறது. குவாரிகள் செயல்பட வேண்டும் என்றால் குளங்களில் தண்ணீர் இருக்கக் கூடாது என்பதால், அங்குள்ளவர்கள் தெளிவாக பல்வேறு பணிகளை செய்து தண்ணீர் வரவிடாமல் தடுத்து வருகிறார்கள்.
கரூர் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். பல்வேறு சந்தேகங்கள் தமிழக அரசின் மீதும் காவல் துறை மீதும் எழுந்துள்ளது. எனவே, சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டம் நடத்துவதற்கு பொருத்தமற்ற இடம் என்று அங்குள்ள காவல் ஆய்வாளர் கடந்த ஜனவரி மாதம் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த மனு அளித்தபோது நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.
வேலுசாமிபுரம் பகுதி குறுகிய இடம். அதில் கூட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். கூட்டம் நடத்துவதற்கு உரிய இடம் இல்லை என்று கடந்த ஜனவரி மாதம் அனுமதி மறுத்த நிலையில், விஜய்க்கு கூட்டம் நடத்த செப்டம்பர் மாதம் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
அல்லு அர்ஜுன் விவகாரத்தை சுட்டிக்காட்டி விஜய்யை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் அனைவரும் சொல்லி வருகிறார்கள். அல்லு அர்ஜுன் விவகாரம் என்பது வேறு, விஜய் விவகாரம் என்பது வேறு. அல்லு அர்ஜுன் அறிவிக்கப்படாத இடத்திற்கு சென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது உயிரிழப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் விஜய் அனுமதி வாங்கித்தான் கூட்டம் நடத்தியுள்ளார். விஜய் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பதை காவல்துறையினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.
விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை என்றால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை. தமிழகத்தில் பல டிஜிபிக்கள் இருப்பதால் காவல் துறையினருக்கு பல இடங்களில் இருந்து உத்தரவு வந்து கொண்டிருக்கிறது. எந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் குழம்பி இருக்கிறார்கள். காவல் துறையில் நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் 2 லட்சம் பேர் கூடிய காஞ்சிபுரம் அத்திவரதர் நிகழ்விலும் காவல் துறை சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்கி எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக நிகழ்ச்சியை முடித்து கொடுத்தனர்.
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தில் அரசியல் சதி இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அரசு இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற விடுமுறை நாட்கள் முடிந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளருடன் கலந்து பேசி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.