கரூர்: தவெக மாநாட்டில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை கைது செய்து கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் உள்ளிட்டோர் விடிய, விடிய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
மேலும் தவெகவைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு அவரும் கரூர் நகர காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் தவெகவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு வி.பி.மதியழகனை தேடி வந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள உறவினர் பவுன்ராஜ் வீட்டில் பதுங்கியிருந்த வி.பி.மதியழகனை தனிப்படையினர் நேற்றிரவு கரூர் அழைத்து வந்தனர். அவருடன் பவுன்ராஜும் அழைத்துவரப்பட்டார். கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மதியழகனிடம் கரூர் எஸ்.பி.கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரம்ஆனந்தன் மற்றும் வெளிமாவட்ட எஸ்.பிக்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதியழகனிடம் போலீஸார் இரவு முதல் விடிய, விடிய தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளரிடம் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருவதும், மற்றொரு தவெக ஆதரவாளரான பவுன்ராஜும் கைது செய்யப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தி வருவதும் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.