மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் – கோவை சாலையில் செப். 25-ம் தேதி மாலை 06.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், மனுதாரர் கோரும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க இயலாது. இதனால் மாற்று இடத்தை பரிந்துரைக்குமாறு மனுதாரருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார்.
மனுதாரர் தரப்பில், அனுமதி கோரும் இடத்தில் 2022 முதல் பல அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் பொதுக்கூட்டதுக்கு அனுமதி கோரும் இடத்தில், ஏற்கெனவே பல்வேறு கட்சிகளுக்கு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி மனு அளிக்க வேண்டும். அந்த மனு அடிப்படையில் செப். 22ம் தேதி மாலைக்குள் காவல் கண்காணிப்பாளர் உரிய முடிவெடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.