கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் இருந்த 19 நிமிடத்தில் 10 நிமிடம் பேசி பேரிழப்பை உண்டாக்கி உள்ளார் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும், ரூ.10 விவகாரம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று மதியம் 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த செப்.27-ம் தேதி கரூரில் நடந்த சம்பவம் துயரமானது. நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அந்த நிகழ்வில் பங்கேற்று காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உடனடியாக விரைந்து வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறிய முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு கரூர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது 50 ஆண்டு கால வாழ்வில் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை. 29 ஆண்டுகள் பொதுவாழ்வில் மக்களுடன் இருக்கிறேன். மக்களின் தேவைகளை அறிந்து உதவி வருகிறேன். கரூர் மாவட்ட மக்கள் என் மீது அன்பும், மதிப்பும் வைத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம்போல இனி எங்கும் நடக்கக் கூடாது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்தவுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறவும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் 5 பேர் மதுரையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள். இந்த குடும்பங்களோடு நேரடியாக தொடர்பில் உள்ளவன்.
தவெக பிரச்சாரத்திற்கு கேட்ட கரூர் லைட்ஹவுஸ் முனை ஒரு திருப்பமான இடம். இங்கு 7,000 பேர் பங்கேற்கலாம். கரூர் உழவர் சந்தை 3,000 முதல் 5,000 பேர் பங்கேற்கலாம். திமுக முப்பெரும் விழாவுக்கு 2 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில 2.5 லட்சம் பேர் வந்தனர். வாகன நிறுத்துமிடம், பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தனியார் இடத்தை காவல் துறையிடம் அனுமதி பெற்று கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கரூர் – வேலுசாமிபுரத்தில் 1,000 முதல் 2,000 செருப்புகள் கிடந்தன. எங்காவது ஒரு தண்ணீர் பாட்டில் கிடந்தததா? இதை குறையாக கூறவில்லை. கட்சியினருக்கு வேண்டியவற்றை அக்கட்சிதான் செய்திருக்க வேண்டும். 12 மணிக்கு அக்கட்சி தலைவர் வருவதாகக் கூறிய நிலையில், காலை 10, 11 மணி முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.
மாலை 4 மணி போல சுமார் 5,000 பேர் இருந்துள்ளனர். குறித்த நேரத்தில் அவர் வந்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசு, அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை உள்ளன. போதுமான இடத்தை தேர்வு செய்வது கட்சியின் பொறுப்பு. கரூரில் பொது நிகழ்ச்சிகள் நடத்த 11 இடங்கள் உள்ளன. செருப்பு வீச்சு, ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் லைவ் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. மற்ற அசாதாரண சூழ்நிலை உருவாக்க முடியுமா? சிலர் விஷமத்தனத்தில் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் வாகனத்தன் முன்பகுதியில் அமர்ந்து வருவார்கள். அல்லது வாகனத்தில் மேல் ஏறி கையசைப்பார்கள். 500 மீட்டருக்கு முன்பே வாகனத்தை நிறுத்தக் கூறியும் நிறுத்தாமல் மற்ற பகுதிகளில் குவிந்திருப்பவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என கேரவனுக்குள் சென்று திரையை போட்டு விளக்கை அணைத்து விட்டார்.
இதே இடத்தில் அதற்கு 2 நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரம் செய்தார். அதற்கு 15,000 பேர் வந்திருப்பார்கள். இதற்கு ஒரு 25,000 பேர் வந்திருப்பார்கள். 19 நிமிடம் தான் அவர் (விஜய்) அங்கிருந்தார். அதில் பேசியது 10 நிமிடத்திற்கும் குறைவுதான். தவறுக்கு பொறுப்பேற்காமல் யார் மீதாவது பழியை போடவேண்டும் என கூறுகின்றனர்.
நான் கட்சி அலுவலகத்தில் கூட்டத்தில் இருந்தேன். தகவல் கிடைத்தவுடன் அருகேயிருந்த மருத்துவமனைக்கு செல்ல எவ்வளவு நேரமாகும்? தவறுக்கு பொறுப்பேற்காமல் மடைமாற்றம் செய்கின்றனர். அது கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம். கட்சி கூட்டங்களில் கட்டுப்பாடு இருக்கும். தொண்டர்ளை தலைவர்கள் ஒழுங்குப்படுத்துவார்கள். யார் பேச்சுக்கும் கட்டுப்படவில்லை. அரசு கடமைகளை சரியாக செய்த நிலையில் அரசியல் கட்சி முழுமையாக செய்ய தவறி விட்டது.
பாஜக உண்மை கண்டறியும் குழு மணிப்பூர், கும்பமேளா, குஜராத் சம்பவங்களுக்கு சென்றிருக்கலாம். சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் விசாரணை ஆணையத்திடம் ஆதாரங்களுடன் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். கைது செய்யப்பட்ட மாவட்ட செயலாளரின் மனைவி 2, 3 நாள் கழித்து வந்து ஸ்பிரே அடித்ததாக கூறுகிறார். இதனை ஆதாரத்துடன் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம். எதிர்க்கட்சியினர் 10 ரூபாய் எனக் கூறி வருகின்றனர். 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி இருந்தது.
அப்போது ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக 7,540 வழக்குகளும், அதற்கும் கூடுதலாக வசூலித்ததாக 8,666 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டுக்கு பிறகு 18,253 வழக்குகளும், ரூ.10-க்கு மேல் வசூலித்ததாக 2,356 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.8.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தொகை ஆளுங்கட்சிக்கு செல்கிறது என்றால், 2016 முதல் 2021 வரை பழனிசாமிக்கு சென்றதா? எனவே, ரூ.10 பழனிசாமி என்பதை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும். அரசியல் காரணங்களுக்காக புழுதிவாரி தூற்றுகின்றனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே. 19 நிமிடத்தில் 10 நிமிடம் பேசி பேரிழப்பை உண்டாக்கி உள்ளார். தவறுக்கு பொறுப்பேற்காமல் பழி போடுகின்றனர்” என்றார் செந்தில் பாலாஜி.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, எல்இடி திரையில், கரூர் கூட்டத்தில் நடந்த காட்சிகளை திரையிட்டு செருப்பு வீசியது, ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது, காவல் துறைக்கு விஜய் நன்றி தெரிவிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் தரப்பு தண்ணீர் பாட்டில் வீசிய காட்சிகளையும் காட்டி நடந்த சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி விளக்கினார். எம்எல்ஏக்கள் ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாம சுந்தரி (கிருஷ்ண ராயபுரம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர். மதியம் 12.03-க்கு தொடங்கிய பேட்டி 1 மணி நேரம் கடந்து 61 நிமிடங்கள் நீடித்து 1.04 மணிக்கு நிறைவுற்றது.