கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா இன்று (அக்.4) காலை ஆய்வு மேற்கொண்டார்.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 உயிர்கள் பறிபோனது. இந்தச் சம்பவம் இந்த ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற கூட்ட நெரிசல் நிகழ்வுகளிலேயே அதிக உயிர்ப்பலி ஏற்படுத்திய நிகழ்வாக உள்ளது. மேலும், இந்திய அரசியல் வரலாற்றில், அரசியல் கட்சி பிரச்சாரத்தில் இப்படியொரு கூட்ட நெரிசல் சம்பவமே நிகழ்ந்ததில்லை என்றளவில் மோசமான சம்பவமாகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கரூரில் சம்பவம் நடந்தன்று இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர், தமிழக காங்கிரஸ், இடதுசாரி தலைவர்கள், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் அடங்கிய குழு என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட தவெக தரப்பை தவிர மற்ற அனைத்துக் கட்சியினருமே கரூருக்கு வந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில், இன்று காலை கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு செய்தார். அப்பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த குழந்தை துருவ் விஷ்ணுவின் வீட்டுக்குச் சென்று குழந்தையின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, நடந்தவற்றை பற்றி விசாரித்துக் கொண்டார்.
தொடர்ந்து அவர், அருகேவுள்ள வடிவேல் நகருகுச் சென்றார். அங்கு உயிரிழந்த காவலர் மனைவி சுகுணாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஒரு நபரை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர் ஏமூர் புதூர் கிராமத்துக்கும் செல்லவிருக்கிறார்.