புதுடெல்லி: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.