சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான காரணங்களை ஆராய்ந்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய, பாஜக சார்பில் ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாய கூட்டணியின் 8 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக வும் தெரிவித்துள்ளார்.
மேலும், கரூர் சென்று, கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 8 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை ஜெ.பி.நட்டா அமைத்துள்ளார். அந்த குழுவின் தலைவராக ஹேமமாலினி செயல்படுவார். குழு உறுப்பினர்களாக பாஜகவின் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சியின் புட்டா மகேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் கரூரில் பாதிக் கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.