கரூர்: கரூர் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (அக்5-ம் தேதி) விசாரணையைத் தொடங்கியது.
சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் 45 நிமிடங்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐ ஜி அஸ்ராக் காரக், “நீதிமன்ற உத்தரவுப்படி முதல் கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளோம். விசாரணை நடந்து வருகிறது. இந்தக் குழுவில் இரண்டு டிஎஸ்பிக்கள், இரண்டு எஸ்பிக்கள், 5 ஆய்வாளர்கள் உள்ளனர். விசாரணையை இப்போதுதான் தொடங்கினோம் என்பதால் வேறு விவரங்கள் ஏதும் தெரிவிக்க இயலாது.” என்றார்.
முதற்கட்டமாக கரூர் சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுதர்சன், கரூர் தனிப் படை காவலர் மோகன் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் தெரிவித்தனர். பின்னர், முதல்கட்ட விசாரணையை முடித்து விட்டு சிறப்பு புலனாய் குழுவினர் புறப்பட்டனர்.
கரூர் விபத்தும், விசாரணைக் குழு அமைப்பும்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் அன்றைய தினம் இரவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வந்து உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியை அறிவித்துச் சென்றார்.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அவர் சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், உயிரிழந்தர்கள் குடும்பங்களை சந்தித்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், மற்றொரு நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.