ஈரோடு: கரூரில் நடந்த அசம்பாவித சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோட்டில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. கரூரில் கட்சியின் கொங்கு மண்டல இளைஞர் அணி கூட்டம் நடைபெற இருந்தது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கான மருத்துவ முகாம் என்பதால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யவில்லை.
கரூர் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இறந்த அப்பாவி மக்களுக்கு தமாகா சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுகிறோம். இந்த சம்பவம் ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பனவற்றை விளக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கடமை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறும் பல சந்தேகங்களுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.
பொதுக்கூட்டத்துக்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். நேர்மையான, நடுநிலையான விசாரணையாக இருக்க வேண்டும். கரூர் அசாம்பாவித சம்பவத்திற்கு சிபிஜ விசாரணை வேண்டும்.
எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு போலீசார் போதுமான பாதுகாப்பு வழங்குவதில்லை. இவ்விஷயத்தில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். கரூர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறேன் என தெரிவித்தார்.
பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.