சென்னை: கரூர் துயரச் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக,நேற்று முதல்வர் ஸ்டாலின் ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அதில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான காணொலிகள் பரவி வருகின்றன. இதில் போலியான, ஜோடிக்கப்பட்ட காணொலிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தார். அதில் அவர், “கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து யாரும் எவ்வித வதந்தியையும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.
இதுதொடர்பாக பெறப்பட்ட புகார்களின்பேரில், பொது வெளியில் வதந்தி பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் செய்திகளை பதிவு செய்த வலைதள கணக்காளர்கள் 25 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். மீறி செயல்படுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என எச்சரித்திருந்தார்.
இதனையடுத்து, கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (38), தவெக மாங்காடு உறுப்பினர் சிவனேசன் (36), அதே கட்சியின் ஆவடி வட்டச் செயலாளர் சரத்குமார் (32) ஆகிய 3 பேரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
இதன் நீட்சியாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். முதல்கட்ட தகவலில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதற்காக ஃபெலிக்ஸ் கைதாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.