கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மறுநாளே விசாரணையை தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், 2 நாட்கள் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சூழலில், வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளாதேவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று கரூர் வந்து விசாரணையை தொடங்கினர். தவெக பிரச்சாரகூட்டம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்ற குழுவினர், நெரிசல் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுதர்சன், கரூர் நகர காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் மோகன்ராஜ் ஆகியோரிடம் அஸ்ரா கார்க் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘இந்த குழுவில் என்னுடன் 2 எஸ்.பி.க்கள், ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 5 ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது தான் விசாரணையை தொடங்கி உள்ளதால், குறிப்பிட்டு எதுவும் கூறமுடியாது” என்றார்.
உயர் நீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 3-ம் தேதி நடந்தது. அப்போது, ‘‘விஜய் பயணம் செய்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக காணொளிகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா?’’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் அளித்த புகாரின்பேரில், விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் 2 பேர் மீது பிஎன்எஸ் 281 (அதிவேகமாக, கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது) பிரிவில் போலீஸார் 4-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.