கரூர்: கரூர் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா கூறினார்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, ஆறுதல் கூறினார். பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்தார்.
பின்னர், கரூர் சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தி ஆகியோரிடம் கூட்ட நெரிசல், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கிஷோர் மக்வானா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விழிப்புடன் இருந்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம். இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து, மீண்டும் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு விசாரணை ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன். இச்சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். ஏனெனில், உயிரிழந்தவர்கள் ஏழை மக்கள். இந்த சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாங்கள் கேட்டுள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.