கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கரூர் மாவட்டம் குளித்தலையில் அக்.3-ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்தது. இதில் அக்.3-ம் தேதி மட்டும் 30 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த தொடர் மழை மற்றும் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப் படாததால் குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
குளித்தலை அருகேயுள்ள பொய்யாமணியை சுற்றியுள்ள கிராமங்களில் பல நூறு ஏக்கர்களில் நெல், வாழை சாகுபடி செய்துள்ளனர். இதில், 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும், வரத்து வடிகால் வாய்க்கால்களை சீரமைக்காததால் தண்ணீர் விரைந்து வடிய முடியாமல் வயலில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகி வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மேலும், கடந்த வாரம் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை செலவு செய்து நெற்பயிர்களை நடவு செய்ததாகவும், அவை அனைத்தும் தொடர் மழையில் நீரில் மூழ்கி அழுகி வருகிறது என்றும், மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை காக்க வரத்து வாய்கால்களை சீரமைத்து தர வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்” விவசாயிகள் கூறினர்.