சென்னை: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன். மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அன்புமணி வலியுறுத்தல்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “கரூர் நகரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.
உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல் துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும்.
கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அன்புமணி கூறியுள்ளார்.