கரூர்: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேற்றிரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய காவல் துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 3 மணிக்குப் பிறகுதான் விஜய் அங்கிருந்து கிளம்பினார்.
இதற்கிடையே, கரூர் வேலுசாமிபுரத்தில் பகல் 12 மணி முதலே தொண்டர்கள், ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால் இரவு 7.15 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.
அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சைக் கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சாரப் பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்கினர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மூச்சுத் திணறி பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரின் உடல்களும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. 40-க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளோரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவக் கல்லூரி முன்பு குழுமியுள்ளனர். அவர்கள் கதறி அழுது துடித்ததால் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.
தலைகுனிந்தபடி சென்ற விஜய்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயங்கியதாக தகவல் தெரியவந்ததும், பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்ட விஜய், அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டார். கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விஜயிடம் செய்தியாளர்கள், ‘‘கரூரில் உங்கள் பிரச்சாரத்துக்கு வந்தவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்களே?’’ என கேட்டபோது, எந்த கருத்தும் கூறாமல், தலையைக் குனிந்த படி சென்றார்.
கரூர் சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்டோரை மீட்கவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, 50-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டன. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான பணிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்தபடி செந்தில் பாலாஜி தீவிரப்படுத்தினார். இதற்கிடையில், நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூருக்குப் புறப்பட்டார்.
தலைவர்கள் இரங்கல்: கரூர் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரூ.10 லட்சம் நிவாரணம்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.