சென்னை: கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம் என்றும், பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: விஜய் பரப்புரை கூட்டத்தில் நெரிசலால் அப்பாவி மக்கள் 40 பேர் உயிரிழந்த நிகழ்வுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பிரச்சாரக் கூட்டத்துக்கு வருவதை குழந்தைகள், முதியோர் தவிர்க்க வேண்டுமென விஜய் வேண்டுகோள் விடுத்த நிலையிலும், இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கரூரில் நடந்த கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: காவல்துறை வகுத்த விதிமுறைகள் பின்பற்றப்படாததால் தமிழகத்தில் வரலாறு காணாத கொடுந்துயரம் கரூரில் நடந்திருக்கிறது.
திக தலைவர் கி.வீரமணி: கரூர் மாநகரமே சோக இருளில் மூழ்கிக் கிடக்கிறது. ஓர் அரசியல் கூட்டத்தில் இப்படியொரு கொடூரம் இதுவரை எங்கும் நடந்திராத, கேள்விப்படாத அவலமாகும்.
விசிக தலைவர் திருமாவளவன்: விஜய் பரப்புரை பயணத்தில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சை பதற வைக்கிறது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தவெக பரப்புரையில் இந்த அளவுக்கு மக்கள் உயிர் பலியாகி இருப்பது மிகப்பெரிய துயரமான சம்பவமாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல் துறை வழங்கிய இடம் பொருத்தமானதா, கூட்டம் எந்த அளவுக்கு திரளும் என மதிப்பிடப்பட்டதா என்பவை பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: இந்தியாவில் இதுவரை அரசியல் பிரச்சார நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசலில் இந்த அளவு பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நிகழ்ந்ததில்லை. அதிர்ச்சி அளிக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: விஜய் பரப்புரையில் அளவுக்கு அதிகமான கூட்டத்தை அனுமதித்தது ஏன், என்ன கோட்பாடுகள் பின்பற்றன என்பது குறித்து உயர்மட்ட நீதி விசாரணை தேவை.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தவெக கூட்டத்தில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரியளவில் உலுக்கி துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: விஜய் பிரச்சாரத்துக்கு தாமதமாக வந்ததே மக்கள் அதிகமாக கூடியதற்கு காரணம்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி இத்தனை உயிர்கள் இழந்திருப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.
முன்னாள் எம்.பி. சரத்குமார்: தான் செல்லும் இடங்களில் அதிகமான கூட்டம் சேருவதை விஜய் பெருமையாக எண்ணிக் கொண்டதே இந்த பெரும் உயிர்சேதத்துக்கு முக்கிய காரணம்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் தமிழிசை, அண்ணாமலை, செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினி, முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், காமராஜர் மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பா.குமரய்யா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு: இதற்கிடையே கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளனர். அதன்படி திமுக சார்பில் நேற்று (செப்.28) நடத்தப்படவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அதேபோல் தருமபுரியில் நேற்று நடைபெறவேண்டிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரம் தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பாஜக சார்பில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த 3 நாட்களுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு, நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.