சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் குடும்பப் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஏற்கும் என பல்கலை. நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின்போது நடந்த துரதிருஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்விச் செலவையும் எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் ஏற்கும். அவர்கள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அவர்களின் கல்விக் கட்டணம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.