சென்னை: கரும்பு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரம் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் 9.5 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரும்புக்கான சாகுபடி செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஆண்டை விட 4.41 சதவீதம் மட்டுமே கொள்முதல் விலை கூடுதலாக உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்றது. இது உற்பத்திச் செலவை ஈடு செய்வதற்கு கூட போதாது. அதனால் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபமாக ரூ.1750 மற்றும் போக்குவரத்துச் செலவுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.5500 வழங்க வேண்டும் என உழவர் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
கொள்முதல் விலையை மத்திய அரசு குறைவாக நிர்ணயித்தால், அதை சமாளிக்கும் வகையில் மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவது வாடிக்கை. அதன்படி கடந்த ஆண்டில் மத்திய அரசு நிர்ணயித்த விலையுடன் ரூ.349 ஊக்கத்தொகை சேர்த்து கரும்புக்கு டன்னுக்கு ரூ.3500 கிடைக்க தமிழக அரசு வகை செய்தது.
நடப்பாண்டில் டன்னுக்கு ரூ.3700 கிடைக்கும் வகையில் ரூ.410 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வரலாம். ஆனால் அதுவும் கூட போதுமானதல்ல. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் கரும்பு விளையாத மாநிலமாக மாறிவிடும்.
எனவே கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்க வகை செய்ய வேண்டும். அத்துடன் தமிழக அரசின் சார்பில் டன்னுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை கோரிக்கை: பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன்னுக்கு ரூ.3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழகக் கரும்பு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால், 2021 தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போதுவரை கரும்பு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. தற்போது மத்திய அரசு கரும்புக்கு டன்னுக்கு, ரூ.3,550 வழங்குகிறது. இதனுடன் அந்த ரூ.1,150 சேர்த்து டன்னுக்கு ரூ.4,700 வழங்க வேண்டும். திமுக அரசு தமிழக விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.