சென்னை: பட்டியலின மாணவி கருக்கலைப்பின்போது உயிரிழந்த விவகாரம் குறித்து செங்கல்பட்டு எஸ்பி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த மாணவிக்கு படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த நிலையில் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநிலக் குழு தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
முதல் தகவல் அறிக்கை: அந்த புகாரில், ‘பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவியை உதவிப் பேராசிரியர் ராஜேஷ்குமார் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கருக்கலைப்பு காரணமாக அந்த மாணவி உயிரிழந்த நிலையில் ராஜேஷ்குமார் மீது பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை’ என கூறியிருந்தனர். இந்த புகாரை ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர் ஆனந்தராஜா ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணை முடிவில், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு எஸ்பி உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.