சென்னை: “நல்லகண்ணு அய்யா விரைந்து நலம் பெற விழைகிறேன்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா விரைந்து நலம் பெற விழைகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (28.08.2025) சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கம்யூனிஸ சித்தாந்தத்தின் முன்னோடி, முதுபெரும் தலைவரும், தன்னலம் கருதாது பொதுச் சேவையில் பெறும் உச்சமாக திகழ்ந்தவருமான பெருமதிப்பிற்குரிய அய்யா நல்லகண்ணு.
அவர், கடந்த 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு, உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுத்து அந்த பரிசோதனையில் தலையில் உள்காயம் ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்தியிருந்தனர். இந்தநிலையில் 24.08.2025 அன்று மாலை அவர் உணவருந்தும்போது உணவுக்குழாயில் புரைஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இரவு 10.30 மணிக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்ட நேரத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையின் முதல்வர் தலைமையிலான அனைத்து சிறப்பு மருத்துவர்களும் மிகுந்த கவனத்தோடு அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். மருத்துவ குழுவின் பரிந்துரைப்படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உணவுப்பொருட்கள் சுவாசக்குழாயில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, Bronchoscopy மூலமாக உணவுத் துகள்கள் அகற்றப்பட்டது. நோயின் தீவிர தன்மையை அறிந்து அவருக்கு Antibiotics மற்றும் பிற மருந்துகள் செலுத்தப்பட்டது.
48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் 26.08.2025 அன்று செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. உறவினர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டது.
இந்தநிலையில் நேற்று 27.08.2025 இரவு வாயில் Secretion தேங்கியதால் மீண்டும் அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, மேலும் மருத்துவ குழுவின் அறிவுரைப்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார், அவரது உடல்நிலை சீராக உள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவர்களுடன் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் மரு.ராஜ் பி. சிங், தொற்றுநோய் நிபுனர் மரு.பிரவீன் போன்றவர்கள் இன்று பிற்பகல் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களுடன் தோழர் நல்லகண்ணுவை பரிசோதிக்க உள்ளனர்.
இவ்வாறு அனைத்து முயற்சிகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகின்றது. பொதுமக்களும் அரசியல் இயக்கங்களை சேர்ந்த முன்னோடிகளுக்கும் ஒரு வேண்டுகோள் 101 வயதை கடந்தவர், விடுதலை போராட்ட வீரர், மிகப்பெரிய தலைவரான தோழர் நல்லகண்ணுவுக்கு இப்போது தேவையே தீவிர சிகிச்சையும் தனிமையும் பாதுகாப்பும்தான். இவரது உடல்நிலை குறித்து விவரம் தெரிந்து கொள்ள மருத்துவமனையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடன் உடல்நிலை குறித்து விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். தேவையில்லாமல் அவரை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்திருந்தார்.