கம்பம்: கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் கம்பம் மலைச் சாலையில் கொட்டப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கம்பம்மெட்டு மலைப்பாதை உள்ளது. தமிழகத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதால், அங்கிருந்து குப்பை, கழிவுகள் இரவில் கொண்டுவரப்பட்டு, தமிழக வனப்பகுதியில் அடிக்கடி கொட்டப்படுகின்றன.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கம்பம்மெட்டு மலையடிவாரம் புதுக்குளம் பகுதியில், சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மூட்டை மூட்டையாக கேரள குப்பை கொட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பறக்கும்படை பொறியாளர் பத்மா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் அங்கு கொட்டப்பட்டது தெரியவந்தது. அவற்றை புதுப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். தொடர்ந்து, மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளர் காருண்யாராஜா, தேனி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் கவிதா தலைமையிலான குழுவினர், கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். கேரளத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், கேரளாவில் இருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சோதனைச்சாவடி அலுவலர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.